மக்களே, இன்னும் 4 வருஷம் நீங்க ஊர்ந்து தான் போகணும்..!
மக்களே, இன்னும் 4 வருஷம் நீங்க ஊர்ந்து தான் போகணும்..!
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இன்னும் 4 ஆண்டுகள் வரை போக்குவரத்து நெரிசல் நீடிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சாலை போக்குவரத்து நிபுணர்கள் கூறியதாவது; ‘சென்னையில், 118. 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் 2025 அல்லது 2026-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ பணிகள் முடிவடையும் வரை பீக் ஹவர் நேரங்களில், பெரும்பாலான பகுதிகளில் வாகனங்களின் வேகம் 10 கிலோ மீட்டராக குறையும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணி மிகவும் சவாலானதாக இருக்கும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ பணிக்காக சென்னையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பல இடங்களில் தற்போது பூமிக்கு அடியில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.
இதனால், அதிகபட்சமாக மவுண்ட் பகுதியில் உள்ள ராமாபுரம் சிக்னலில் தினசரி ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 412 வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சந்திப்பில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 713 வாகனங்கள் காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில் நிர்வாகம், கட்டுமானப் பணிகளை பல பகுதிகளாக பிரித்துள்ளது. மேலும், பல இடங்களில் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு நீண்ட கால நோக்கில் திட்டங்களை வகுப்பது மட்டுமே பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதை தடுக்கும்’ என தெரிவித்துள்ளனர்.