வன்முறை பதிவுகளுக்கு அனுமதி.. வழங்கியது ஃபேஸ்புக் நிறுவனம்..!
வன்முறை பதிவுகளுக்கு அனுமதி.. வழங்கியது ஃபேஸ்புக் நிறுவனம்..!
உக்ரைன் மீது ரஷ்யா 16வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள், ராணுவத்தினர், ரஷ்ய ராணுவத்தினர் என ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், உக்ரைனில் இருந்து 2 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளியேறி இருப்பதாக ஐ.நா கூறியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யப் படைகளுக்கு எதிரான வன்முறை பதிவுகளுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துக்களை பதிவிடக் கூடாது என்ற விதிமுறைகளில் இருந்து ஃபேஸ்புக் தளர்வு வழங்கியிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பெலரூஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லூகாஷென்கோ ஆகியோருக்கு மரணம் வரும்படிக் கோரும் சில பதிவுகளுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பை முன்னிட்டு, ரஷ்யப் படை வீரர்களுக்கு மரணம் போன்ற பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில், விதிகளில் தற்காலிக அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்று ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் மேட்டா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வீரர்களுக்கு எதிரான வன்முறை பதிவுகள் போடும் வகையில் திருத்தப்பட்ட கொள்கை விதி மாற்றங்கள் ஆர்மீனியா, அஜர்பைஜான், எஸ்டோனியா, ஜார்ஜியா, ஹங்கேரி, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, ருமேனியா, ரஷ்யா, ஸ்லோவாக்கியா மற்றும் உக்ரைனுக்கு பொருந்தும் என்று ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், குடிமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.