இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.20 குறைப்பு..!!
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.20 குறைப்பு..!!;
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறையால் நாட்டின் 22 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து, பள்ளிகள் முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன.
அங்குள்ள பெட்ரோல் மற்றும் எரிவாயு நிரப்பும் நிலையங்களில் போதிய இருப்பு இல்லாததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் வாங்க வரிசையில் தொடர்ந்து பல நாட்கள் காத்திருந்ததில், கிட்டத்தட்ட 20 பேர் சோர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை தலா 20 ரூபாய் குறைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் ஐந்து முறை விலை உயர்வுக்கு பிறகு தற்போது விலை குறைந்துள்ளது. அதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நேற்று இரவு 10.00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் 20 ரூபாய் குறைந்து ரூ.450-க்கும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் 10 ரூபாய் குறைந்து குறைக்கப்பட்டு, ரூ. 540-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் 20 ரூபாய் குறைந்து ரூ.440-க்கும், சுப்பர் டீசல் 10 ரூபாய் குறைந்து ரூ.510-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.