பிற நாடுகளை விட இந்தியாவில் குறைவாகதான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.. மத்திய அரசு !!
பிற நாடுகளை விட இந்தியாவில் குறைவாகதான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.. மத்திய அரசு !!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 22ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்த்தப்பட்டு, 110 ரூபாய் 09 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்த்தப்பட்டு 100 ரூபாய் 18 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை முதன்முறையாக ஒரு லிட்டர் நூறு ரூபாயை தாண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், இருசக்கர வாகன ஓட்டிகள், சரக்கு வாகன ஒட்டுனர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று எரிபொருள் விலை உயர்வு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, ஏப்ரல் 2021 மற்றும் மார்ச் 22-க்கு இடையிலான காலகட்டத்தில், அமெரிக்கா எரிபொருள்(பெட்ரோல்) விலையை 51 சதவீதம் அதிகரித்துள்ளது.
அந்த ஒரு ஆண்டு காலகட்டத்தில், கனடா 52 சதவீதம், ஜெர்மனி 55 சதவீதம், இங்கிலாந்து 55 சதவீதம், பிரான்ஸ் 50 சதவீதம், ஸ்பெயின் 58 சதவீதம் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன. ஆனால் இந்தியாவில் 5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
newstm.in