அதிமுக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன் விடுவிப்பு.. ஈபிஎஸ் அறிவிப்பு
அதிமுக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன் விடுவிப்பு.. ஈபிஎஸ் அறிவிப்பு
அதிமுக கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன், நத்தம் விசுவநாதன், எஸ்பி வேலுமணி ஆகியோர் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கான புதிய பொறுப்புகளை அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் அண்மையில் நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் என தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு முதல் நடவடிக்கையை எடுத்துள்ளார். அதாவது, புதிய நிர்வாகிகளை கட்சிக்கு அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொன்னையன், நத்தம் விசுவநாதன், எஸ்பி வேலுமணி ஆகியோர் விடுவிக்கப்படுகின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூடுதல் தலைமை கழக செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, அதிமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக எஸ்பி வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜு, சிவி சண்முகம், பா.தனபால், கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ், ஓ.எஸ். மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பா.பென்ஜமின், ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
newstm.in