சொத்துவரி செலுத்தாத கட்டிடங்களின் மின் இணைப்பு துண்டிப்பு.. தீவிரமாகும் நடவடிக்கை !!
சொத்துவரி செலுத்தாத கட்டிடங்களின் மின் இணைப்பு துண்டிப்பு.. தீவிரமாகும் நடவடிக்கை !!
சென்னை உள்பட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் முக்கிய வரிவருவாயாக இருப்பது சொத்துவரி வருவாய் தான். இதனால் சொத்துவரியை வசூலிப்பதில் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் கடுமைகாட்டி வருகின்றன. சொத்து வரி செலுத்தாத குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் திருவள்ளூர் நகராட்சிக்கு நீண்டகாலமாக சொத்துவரி செலுத்தாத 9 கட்டிடங்களின் மின் இணைப்பை துண்டிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் நகராட்சி நிர்வாகம் கடிதம் அளித்துள்ளது. திருவள்ளூர் நகராட்சி பகுதியில் 12,500 குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பல குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாளச் சாக்கடை கட்டணம் போன்ற வரி இனங்களை நிலுவையில் வைத்துள்ளன.
அவ்வாறு நிலுவையில் வைக்கப்பட்ட வரி இனங்களின் மொத்ததொகை கடந்த மே 31ஆம் தேதிநிலவரப்படி, சுமார் ரூ.7.22 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை நீடிக்கிறது. ஆகவே, நிலுவையில் உள்ள வரி இனங்களை வசூலிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் சிவிஎன் சாலை, ஜெஎன் சாலை, அஹிம்சா சாலை பகுதிகளில் உள்ள 9 கட்டிடங்களின் உரிமையாளர்கள், நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் உள்ளனர். ஆகவே, அக்கட்டிடங்களின் மின் இணைப்பைத் துண்டிக்குமாறு, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி கடந்த மே 31ஆம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் திருவள்ளூர் செயற்பொறியாளரிடம் கடிதம் அளித்துள்ளார்.
இதனால் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் மின்இணைப்பு துண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.
newstm.in