விசாரணை கைதி விக்னேஷ் மரணம்.. கைதான காவலர்களுக்கு ஜாமீன் மறுப்பு..!

விசாரணை கைதி விக்னேஷ் மரணம்.. கைதான காவலர்களுக்கு ஜாமீன் மறுப்பு..!

Update: 2022-06-08 05:20 GMT

சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை, சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக தலைமைச் செயலக காலனி போலீசார் கைது செய்தனர். அன்று இரவே விக்னேஷ் விசாரணையின் போது உயிரிழந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில், விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விக்னேஷை காவல் நிலையத்தில் போலீசார் கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலர் பவுன்ராஜ், தலைமைக் காவலர் முனாஃப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன், சந்திரகுமார் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதில், காவலர் பவுன்ராஜ் தவிர மற்ற 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆரம்பகட்டத்தில் விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க சிபிசிஐடி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Similar News