திறமை இல்லாத பொம்மை முதல்வர்.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!
திறமை இல்லாத பொம்மை முதல்வர்.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று, சென்னையில் இருந்து சேலம் செல்லும் வழியில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
“அதிமுக வளர்ச்சிக்காகவும், மீண்டும் ஜெயலலிதா ஆட்சி வரவும் கடுமையாக உழைக்க நான் காத்திருக்கிறேன். அதிமுகவில் மட்டும் பிரச்சனை இல்லை; பிரச்சனை இல்லாத கட்சிகள் இந்தியாவிலேயே இல்லை.
சிலரின் சுயநலத்தால் கட்சியில் பிரச்சனை ஏற்பட்டது. சிலரின் சூழ்ச்சியால், சதியால் தான் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இங்குள்ள ஆட்சியாளர்கள் திட்டமிட்டு அதிமுகவை அழிக்க நினைக்கின்றனர்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது; நாம் தான் வாரிசு; அதிமுக தொண்டர்கள் தான் வாரிசு. நம் தலைவர்களுக்கு மக்கள் தான் குடும்பம். மக்களுக்காகவே வாழ்ந்தனர்.
ஆனால், திமுகவினர் குடும்பத்திற்காக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். வாரிசு அரசியல் நடத்துகின்றனர். மன்னர் பரம்பரை போல, கருணாநிதி, ஸ்டாலின், அதன் பிறகு உதயநிதி. மக்களுக்காக திட்டங்களை தீட்டி செயல்பட்ட கட்சி அதிமுக மட்டுமே. தங்கள் வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்யும் கட்சி திமுக.
எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
போதைப் பொருட்கள், தங்கு தடையின்றி கிடைக்கிறது; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.
அதைத் தடுக்க முடியவில்லை. எதற்கெடுத்தாலும் கமிஷன் என 37 கமிஷன் அமைத்து, சாதனை படைத்த அரசு ஸ்டாலின் ஆட்சி மட்டுமே. தற்போது, யாரோ சொல்வதைக் கேட்டு, திறமை இல்லாத, பொம்மை முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார்” என்று தெரிவித்தார்.