அம்மா உணவகத்தில் பூரி, வடை, ஆம்லெட்.. மாநகராட்சி உதவி ஆணையர் அதிரடி உத்தரவு..!
அம்மா உணவகத்தில் பூரி, வடை, ஆம்லெட்.. மாநகராட்சி உதவி ஆணையர் அதிரடி உத்தரவு..!
மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய் இட்லி, 5 ரூபாய் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லெட் என லிஸ்டில் இல்லாத உணவுகளை தயாரித்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
அதேபோல், மதிய வேளைகளில் அனுமதிக்கப்பட்ட சாதத்துடன் சேர்த்து ரசம், ஆம்லெட் என விற்பனை செய்யப்படுகிறதாம். ரசம், ஆம்லெட்டுக்கு தனியாகப் பணம் பெற்றுக் கொள்ளப்படுகிறது.
சில கவுன்சிலர்கள் அம்மா உணவக ஊழியர்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அம்மா உணவகத்திற்கு வரும் கேஸ் மற்றும் உணவு தயாரிக்க வரும் பொருட்களை வைத்து இப்படி லிஸ்டில் இல்லாத பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லெட் ஆகியவற்றை தயாரித்து விற்பதாக கூறப்படுகிறது.
இந்த உணவுகளை தயாரிக்க ரேஷன் கடை அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு, உளுந்து, ரவை உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் கேட்டால், ‘அதுபோன்று எதுவும் இல்லை. அரசியல் உள் நோக்கத்திற்காக சிலர் இப்படி புகார் தெரிவிக்கின்றனர்’ எனக் கூறுகின்றனர்.
ஏழை எளியோரின் பசி போக்க தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தை சிலர் தங்களுக்கு லாபம் ஈட்டும் உணவகமாக மாற்றியுள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து உரிய விசாரணைகள் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், மதுரையில் அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவுகளை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக மகளிர் குழுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விரைவில், புதிய மகளிர் குழுவிற்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.