தமிழ்நாட்டில் ராஜ்பவன் அலுவலகம் தற்பொழுது ஆர்எஸ்எஸ் அலுவலமாக மாறிக் கொண்டு வருகிறது..!!

தமிழ்நாட்டில் ராஜ்பவன் அலுவலகம் தற்பொழுது ஆர்எஸ்எஸ் அலுவலமாக மாறிக் கொண்டு வருகிறது..!!

Update: 2022-04-16 05:00 GMT

திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணக் பொதுக் கூட்டம் கடந்த 3-ம் தேதி நாகர்கோவிலில் தொடங்கி 25-ம் தேதி சென்னையில் முடிவடைகிறது.

தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை, உழைக்கும் மக்களுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிக்க கூடாது என்ற 3 முக்கிய பிரச்சனைகளை வலியுறுத்தி இந்த பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. காஞ்சிபுரம், விழுப்புரம் என ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் பாஜகவை சரமாரியாக கி.வீரமணி விமர்சித்து வருகிறார்.

குறிப்பாக காஞ்சிபுரம் கூட்டத்தில் வீரமணி பேசியதாவது, “திராவிட மாடல் என்றால் பெண்கள் கையில் பதவி இருப்பது தான். ஆனால் அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று பேசி வருவது தான் பாஜக. பார்ப்பனர்கள் தனக்கு கீழே இருக்கும் ஜாதிகளை அவர்கள் யாரும் படிக்கக் கூடாது, படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும், அத்துமீறி படித்தால் கடுமையான தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தான் இந்த பார்ப்பனர்கள். நூறு வருடம் ஆனாலும் சரி, பாஜக கட்சியால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. திராவிட கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியும்” என்றார்.

அந்த வகையில், திருவண்ணாமலையிலும், இந்த பொதுக்கூட்டம் நடந்துள்ளது. அப்போது கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, “மக்களுக்கு தெளிவு ஏற்படுத்துவதற்காக தான் இந்த சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்தியாவில் ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே கல்விக்கொள்கை, ஒரே தேர்தல் என்று சொல்லிவரும் பாஜக ஒரே சாதி என்று சொல்ல முடியுமா?

இப்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் அனைத்தும் வெளிப்படையாக செய்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக எவ்வளவு கரணம் போட்டாலும் வெளியே வர முடியாது. பாஜக குத்தகைக்கு போனதால் மட்டுமே 4 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக அனைத்து தேர்தல் முடிவுகள் சொல்லும். திமுக என்பது வெற்றிடம் இல்லை. தமிழ்நாட்டில் அனைவரும் கற்றுக் கொள்ளக் கூடிய கற்றிடம். மேலும், தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழ் வருடப் பிறப்பில் வருகின்ற 60 வருடங்களில் ஏதேனும் ஒரு தமிழ் வருடம் உள்ளதா? ராஜ்பவனில் நடைபெற்ற விருந்து என்பது வழக்கத்திற்கு மாறாக நடைபெற்ற விருந்து. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் உள்ள ராஜ்பவன் அலுவலகம் தற்பொழுது ஆர்எஸ்எஸ் அலுவலமாக மாறிக் கொண்டு வருகிறது. உலகம் பார்த்து வியக்கும் அளவிற்கு தமிழ்நாடு முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார். இதனை பாஜக குறுக்குசால் ஓட்டி பார்த்தால் மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்” என்றார்.

Similar News