அரசு வேலையில் சேர அரிய வாய்ப்பு.. இதை மிஸ் பண்ணிடாதீங்க..!
அரசு வேலையில் சேர அரிய வாய்ப்பு.. இதை மிஸ் பண்ணிடாதீங்க..!
‘தமிழக அரசின், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் நடத்தும் மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்' என, தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், அகில இந்திய குடிமைப் பணியில் அடங்கிய முதல் நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
நடப்பு நிதியாண்டில், முதன்மைத் தேர்வுக்கு படித்த 80 பேரில் 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மூன்று பேர், தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தற்போது, இந்த மையத்தில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பிற தேர்வர்களும் பங்கேற்கலாம். இதற்கு கட்டணம் கிடையாது.
தேர்வில் பங்கேற்க விரும்புவோர், alcscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி, 94442 86657 என்ற வாட்ஸ் அப்' எண், 044 - 24621909 என்ற தொலைபேசி எண் என, ஏதேனும் ஒன்றில் தொடர்பு கொண்டு, தங்கள் விருப்பம் மற்றும் விவரங்களை தெரிவிக்கலாம்.
மாதிரி ஆளுமை தேர்வுக்கான தேதி குறித்த விவரங்கள், www.civilservicecoaching என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.
ஆளுமைத் தேர்வுக்காக படித்து டில்லி செல்ல தேர்வு செய்யப்படுவோருக்கு பயணச் செலவுத் தொகையாக, இந்த மையத்தால் ஆண்டுதோறும் 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டில் இருந்து இந்தத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.