கரையில் செத்து ஒதுங்கிய அரிய வகை கடல் டிராகன்..!!
கரையில் செத்து ஒதுங்கிய அரிய வகை கடல் டிராகன்..!!
ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் வசித்து வருபவவை கடல் டிராகன்கள். நீண்ட மூக்குடன், பார்ப்பதற்கு குட்டி டைனோசார்கள் போன்று காணப்படும் அரிய இன வகையான இந்த கடல் டிராகன்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக கடல்நீரில் வாழ்கின்றன.
டைனோசார்கள் காலத்தில் இருந்தே வாழ்ந்து வரும் இவை தற்போது எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. இவற்றை கடினம் வாய்ந்த குட்டி பிசாசுகள் என்றும் அழைக்கின்றனர்.
ஏனெனில், வலிமையான நீரோட்டங்களின்போதும் அவற்றில் சிக்காமல் இவை தாக்குப்பிடித்து தங்களது வசிப்பிடங்களிலேயே தொடர்ந்து நீடிக்கும் திறன் கொண்டவை. எனினும் புயல்களால் இவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.
இந்த நிலையில், சமீப நாட்களாக இவை திடீரென அதிக அளவிலான எண்ணிக்கையில் கரையில் செத்து ஒதுங்கி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கடல் டிராகன் நிபுணர் மற்றும் கடல்வாழ் சூழலியலின் பேராசிரியரான டேவிட் பூத் கூறும்போது, “கடந்த 2 வாரங்களாக 20-க்கும் கூடுதலான கடல் டிராகன்கள் செத்து கரைப்பகுதியில் ஒதுங்கி வருகின்றன. இந்த எண்ணிக்கை சிட்னியில் 50-க்கும் கூடுதலாக இருக்க கூடும். ஆனால், அதுபற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.
இதற்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையிலான தட்பவெப்ப நிலை மாறுபாடு, கடல் மாசு ஆகியவற்றின் மொத்த பாதிப்பு காரணிகளாக உள்ளன” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து ஏற்படும் பருவநிலை மாறுபாட்டால், அரிய வகை மற்றும் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உயிரியியலாளர்களாகல் வகைப்படுத்தப்பட்டு உள்ள இந்த கடல் டிராகன்களின் எண்ணிக்கை வடக்கு பகுதியில் குறைந்து வருவது வருத்தத்திற்குரியது என்பதுடன், குளிர் நிறைந்த நீர்ப்பகுதியை நோக்கி அவை பயணிக்க கூடிய சூழலும் ஏற்பட்டு உள்ளது என்றும் பூத் கூறுகிறார்.