மதுவை குறைத்து தண்ணீரை அதிகம் சேருங்கள்.. அமைச்சர் சுப்பிரமணியன் அட்வைஸ்..!

மதுவை குறைத்து தண்ணீரை அதிகம் சேருங்கள்.. அமைச்சர் சுப்பிரமணியன் அட்வைஸ்..!

Update: 2022-05-04 15:37 GMT

தமிழகத்தில் இன்று (4-ம் தேதி) முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை உள்ள 25 நாட்களுக்கு கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைக்கும்.

இந்நிலையில், சென்னையில், கோடை கால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கும் விழிப்புணர்வு கண்காட்சியை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை வெப்பத்தில் இருந்து மக்கள் எவ்வாறு தப்பிக்கலாம் என்பது குறித்து அறிவுரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், “கோடைகாலம் முடியும் வரை வெளியே செல்லும் மக்கள் கையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது நல்லது.

தாகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கோடை காலத்தில் போதிய அளவு நீர் குடிக்க வேண்டும். கோடையில் வெளியே செல்லும் போது முடிந்தவரை எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகளை பருகுங்கள்.

அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெயிலில் பயணிக்கும் போது தலையில் துண்டு, தொப்பி, துணி உள்ளிட்டவற்றை அணிந்து செல்வது நல்லது.

கால்களில் செருப்பு இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். காற்றோட்ட வீடுகளில் தங்கி இருப்பது அவசியம். தேநீர், காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பாட்டில்களில் அடைத்து வைத்துள்ள குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

வெயில் காலம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது குழந்தைகளை ஏற்றக் கூடாது.

கோடை வெப்பத்தால் பாதிப்புக்குள்ளாவோருக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் படுக்கைகள் இருக்கிறது. ஏதாவது உடல் நல பாதிப்பு என்றால் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Similar News