மறு தேர்தல்.. ஓட்டு மிஷினில் தில்லாலங்கடி.. 13 வேட்பாளர்கள் கலெக்டரிடம் மனு..!
மறு தேர்தல்.. ஓட்டு மிஷினில் தில்லாலங்கடி.. 13 வேட்பாளர்கள் கலெக்டரிடம் மனு..!
கோவை மாநகராட்சி 32-வது வார்டில் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் பார்த்திபன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதை ஏற்க மறுத்த அதிமுக உட்பட மற்ற வேட்பாளர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரம் மாறியுள்ளதாக புகார் கூறி வெளிநடப்பு செய்து கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வெளியேற்றினர்.
இந்நிலையில், வெளிநடப்பு செய்த 13 வேட்பாளர்கள் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ‘ஓட்டு இயந்திரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு பிரிக்கப்பட்டு, முத்திரை அகற்றப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் முறையாக பதிலளிக்க மறுத்து விட்டனர். ஓட்டுப்பதிவு பெட்டியில் உள்ள இவிஎம் எண்ணைத் தவிர மற்ற எண்களை பூத் ஏஜென்டுகளுக்கு காட்டாமல் ஓட்டுகளை எண்ண முயன்றனர். பூத் ஏஜென்ட் கையெழுத்துகளும் மாறுபட்டு இருந்தது.
கடந்த 21-ம் தேதி இரவு 12 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
இதனால், ஓட்டுப்பதிவு பெட்டிகளில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, கோவை மாநகராட்சி 32-வது வார்டில் மறு தேர்தல் நடத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்’ என அவர்கள் கூறினர்.