#BREAKING:- குழந்தைகளுக்கு நிவாரண உதவி.. தமிழக அரசு அறிவிப்பு..!

#BREAKING:- குழந்தைகளுக்கு நிவாரண உதவி.. தமிழக அரசு அறிவிப்பு..!

Update: 2022-05-30 15:32 GMT

தமிழகத்தில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை அளிக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, தாய் - தந்தை என இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாயும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாயும் நிவாரணம் அளிக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியான நபர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில், பெற்றோர் இருவரையும் இழந்த 21 குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் 544 என, மொத்தம் 565 குழந்தைகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 239 குழந்தைகளுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி மதியழகன் கூறியதாவது; “கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 783 குழந்தைகள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இதனை முழுமையாக ஆய்வு செய்து, தகுதியானவர்கள் என உறுதி செய்யப்பட்ட பின் பெற்றோர் இருவரையும் இழந்த 21 குழந்தைகள், இருவரில் ஒருவரை இழந்த 544 குழந்தைகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது.

மற்றவர்களுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும். கொரோனாவால் பெற்றோரில் ஒருவர், பெற்றோர் இருவரையும் இழந்த 804 குழந்தைகளுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் படித்து வரும், 550 மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் படித்து வரும், 37 மாணவர்களின் கல்வி கட்டணத்தை குறைக்க பள்ளி கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 39 குழந்தைகள் கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

Similar News