ஓபிஎஸ் நீக்கம்.. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இவர்தான்..!
ஓபிஎஸ் நீக்கம்.. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இவர்தான்..!
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், இரட்டைத் தலைமை ரத்து, பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவோடு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையே, கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை அடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, அதிமுக பொருளாளர் உள்ளிட்ட பதவிகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பறிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில், எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, அந்தப் பதவியை எஸ்.பி.வேலுமணியிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.