மக்களை அரிவாளால் தாக்கிய ரவுடிகள்.. கை, கால்களுக்கு மாவுகட்டுகளுடன் சிறையில் அடைத்த போலீசார் !
மக்களை அரிவாளால் தாக்கிய ரவுடிகள்.. கை, கால்களுக்கு மாவுகட்டுகளுடன் சிறையில் அடைத்த போலீசார் !
சென்னை அம்பத்தூர் அடுத்த சண்முக புறம் பகுதியில் திடீரென மக்கள் சிதறி ஓடியதால் பதற்றம் நிலவியது. அதாவது, ஆட்டோவில் வந்த இருவர் தங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் பொதுமக்களை தாக்கினர். இதுவே அந்த பரபரப்புக்கு காரணம்.
முதலில், இருவரும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த முதியவர் மாணிக்கம், அவர்களை சமாதானம் செய்துள்ளார். ஆனால், இருவரும் முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மாணிக்கத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். போகும் வழியில் மேலும் சிலரை தாக்கிய அக்கும்பல், வீட்டின் முன்பு நின்ற கார் ஒன்றை அடித்து நொறுக்கினர்.
ஆட்டோவில் தப்பிய ரவுடிகள் வெட்டியதில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் இருவர் கத்தியுடன் சுற்றுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்ற போலீசார் ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்றொரு ரவுடி தப்பி ஓடினார். பிடிபட்ட ரவுடியிடம் விசாரணை செய்ததில், அவர் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருள் நகர் முருகம்பேடு பகுதியை சேர்ந்த கணேசன் என்கின்ற கணேஷ் குமார் என்பதும், இவர் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் பல நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
தப்பி ஓடிய மற்றொரு ரவுடி ரேசர் கணேசன், புழல் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறை அங்கு பதுங்கி இருந்த ரவுடி ரேசர் கணேசனை பிடிக்க முயன்றனர். காவல்துறையினரிடம் சிக்கமால் இருக்க அங்கிருந்து தப்பி ஓட்டியபோது அவனது இடது கால் முறிவு ஏற்பட்டது.
இதன்பின்னர் அவரை கைது செய்து மருத்துவமனைக்கு அனுப்பி, மாவு கட்டு போட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, ஏற்கனவே கைது செய்யப்பட்ட கணேசன், காவல்நிலைய கழிவறையில் வழுக்கிவிழுந்து கையில் மாவு கட்டு போடப்பட்டநிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கிடையில் கைதான இருவரும் சம்பவத்தன்று கத்தியைச் சுழற்றி அம்பத்தூரில் உள்ள ஒரு மதுபான கடையில் இவர்கள் தகராறு செய்யும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தி தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
newstm.in