ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிச்சயம்! அமைச்சர் உறுதி!!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிச்சயம்! அமைச்சர் உறுதி!!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய நகராட்சிகள் மற்றும் ஆலங்காயம், உதயேந்திரம் ஆகிய பேரூராட்சிகள் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் திமுக போட்டியிட வேண்டும் என்பது தான் ஆசை, அரசியல் கட்சி என்றால் ஆசை படவேண்டும் அதில் எந்தவித தவறும் இல்லை என்றார்.
ஆனால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றை கற்று தந்த அண்ணா அவர்களின் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். அத்தகைய திராவிட முன்னேற்ற கழகத்தின் உடன்பிறப்புகள் ஆகிய நாம் திமுக கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு பணியாற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், நாம் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் கூடுதலாக ஒருமணி நேரம் பணியாற்றி வெற்றியை பெற வேண்டும் சட்டபேரவையிலே கூட்டணியில் இருக்கும் நமது அன்பு சகோதரர்களுடன் நாம் தற்போதும் இணைந்து இருக்கின்றோம் என்று பேசினார்.
வாணியம்பாடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வாணியம்பாடி நகராட்சி 36 வார்டு மற்றும் ஆலங்காயம் பேரூராட்சி 15 வார்டு சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். அதை கண்டிப்பாக வழங்குவோம். நான் சொல்கிறேன் எழுதி வைத்து கொள்ளுங்கள் அந்த பணத்தை வழங்குவோம் என்றார்.
newstm.in