அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1,000 உதவித்தொகை..!!

அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1,000 உதவித்தொகை..!!

Update: 2022-06-07 14:19 GMT

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வி, இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளி மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் இருப்பதைக் கருத்தில்கொண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.

இந்த திட்டம் வரும் கல்வி ஆண்டு ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாள் அன்று முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால் பயனாளிகளை இறுதி செய்வதற்காக, மேற்படிப்பு படிக்கும் மாணவிகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற மாணவிகள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வசதியாக இணையதளம், செல்போன் செயலி உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சமூகநலத் துறை அதிகாரிகள், அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளின் விவரங்களை பள்ளிக்கல்வித் துறையிடம் பெறப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறையை பொறுத்தவரை கல்லூரிகளில் தனித்தனியாக விவரங்கள் பராமரிக்கப்படுவதால், மாணவிகளின் விவரங்களை விரைவாக பெறுவதில் சிக்கல் உள்ளது என்றும், மாணவிகளின் விவரங்களை சேகரிக்கும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு சார்பில் ரூ.760 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அரசிடமிருந்து கூடுதல் நிதி பெறவும் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெறும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளம், செல்போன் செயலி உருவாக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவிகள் நேரடியாக அந்தந்த கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

Similar News