பொதுமக்களுக்கு ரூ.10,000 பரிசு.. மாவட்ட எஸ்பி அசத்தல் அறிவிப்பு..!

பொதுமக்களுக்கு ரூ.10,000 பரிசு.. மாவட்ட எஸ்பி அசத்தல் அறிவிப்பு..!

Update: 2022-04-07 11:02 GMT

“கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்” என,  திருவள்ளூர் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதற்கான பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தவும்,  கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கூண்டோடு பிடிக்கவும் எஸ்பி வருண்குமார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து ரகசிய தகவல் தெரிவிக்க வழங்கப்பட்டுள்ள 63799-04848 என்ற அலைபேசிக்கு கஞ்சா கடத்தல், குட்கா கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க விரும்பாதவர்கள் வாட்ஸ் அப் மூலம் கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் இடம், மற்றும் குற்றவாளிகள் குறித்து தகவல் அனுப்பலாம்.

தெரிவித்த தகவலின் அடிப்படையில் 10 கிலோ மற்றும் அதற்கு மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டால் தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

இது, காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். தகவல் அளிப்பவர்களின் பெயர் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட இதர அடையாளங்கள் ரகசியமாக இருக்கும்.

எனவே, கஞ்சாவை அறவே ஒழித்து, இளைய சமுதாயம் மற்றும் வருங்கால தமிழகத்தை காக்க உதவிடுங்கள்” என கூறப்பட்டுள்ளது.

Similar News