உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

Update: 2022-06-06 05:05 GMT

நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ் அருங்குளம் குச்சிபாளையம் அருகே கெடிலம் ஆறு ஓடுகிறது. அங்குள்ள தடுப்பணையில் அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று குளிப்பது வழக்கம்.

இந்த நிலையில், ஏ.குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துராமன் மகள் சுமுதா(16), குணால் மகள் பிரியா(17), அமர்நாத் மகள் மோனிகா(15), சங்கர் மகள் சங்கவி(16), முத்துராம் மகள் நவிவிதா(18), அயன் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ராஜகுரு மகள் பிரியதர்ஷினி(15), அவரது தங்கை திவ்யதர்ஷினி(10) ஆகியோர் இன்று காலை கெடிலம் ஆற்று தடுப்பணைக்குச் சென்றுள்ளனர்.

அந்த தடுப்பணையின் கரையில் குளித்தவர்கள், சிறிது நேரத்தில் ஆழமான பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த தடுப்பணையில் பள்ளமான இடத்தில் அவர்கள் சிக்கியதாக சொல்லப்படும் நிலையில், முதலில் தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற உடனிருந்தவர்களும் அடுத்தடுத்து மூழ்கியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து ஊர் மக்கள் திரண்டு வந்து தடுப்பணையில் குதித்து பெண்கள் மற்றும் சிறுமிகளை மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தோரின் உடல்களுக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Similar News