மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்.. முதல்நாளில் குவிந்த விண்ணப்பம்! !!
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்.. முதல்நாளில் குவிந்த விண்ணப்பம்! !!
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பம் தொடங்கிய முதல் நாளான இன்று ஒரே நாளில் 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டது. இதன் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு செலவுத் திட்டத்தில் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் (scholarship for college students) வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், அரசு பள்ளியில் இருந்து கல்லுாரிகளுக்கு சென்று முதல், இரண்டு, மூன்றாவது ஆண்டு படிக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அந்தவகையில், 6 முதல் 12வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு விண்ணப்பம் தொடங்கிய முதல் நாளான இன்று ஒரே நாளில் 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
newstm.in