உக்ரைன் ராணுவ பயிற்சி தளம் மீது ரஷ்யா தாக்குதல்.. 35 பேர் பலி !!
உக்ரைன் ராணுவ பயிற்சி தளம் மீது ரஷ்யா தாக்குதல்.. 35 பேர் பலி !!
உக்ரைனின் ராணுவ பயிற்சி தளம் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். 134 பேர் படுகாயம் அடைந்தனர்.
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நீடித்து வருகிறது. ரஷ்யாவின் உக்ரைனின் அரசு அலுவலகங்கள், காவல்துறை, உளவுத்துறை கட்டிடங்களை தகர்த்து வருகிறது. மேலும் ராணுவ தளங்கள், மூகாம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், மேற்கு உக்ரைனின் லிவிவ் நகரில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி தளத்தை குறி வைத்து ரஷ்ய ராணுவம் நேற்று அடுத்தடுத்து 30 ஏவுகணைகளை வீசியது.
இந்த கொடூர தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். 134 பேர் படுகாயம் அடைந்தனர். உக்ரைனில் இதுவரை 3,687 ராணுவ தளங்கள் தகர்க்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. தாக்குதல் தொடர்பாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலிசி ரெஸ்னிகாவ் கூறுகையில், லிவிவ் நகரம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. போர் விமானங்களும் குண்டுகளை வீசின. இதில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர். உக்ரைனில் விமானங்கள் பறக்க நேட்டோ சார்பில் தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் உக்ரைன் மக்களை காப்பாற்ற முடியும், என்றார்.
தாக்குதல் நடத்தப்பட்ட லிவிவ் நகரம் நேட்டோவில் அங்கம் வகிக்கும் போலந்துக்கு மிக அருகே அமைந்துள்ளது. நேட்டோ நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
கீவ், கார்கிவ், மேரிபோல், கெர்சன், இர்பின், செர்னிஹிவ், வால்னோவாகா, மைகோலாவ் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் நேற்று தீவிர தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. தலைநகரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் ரஷ்ய பீரங்கி படைகள் நிலைநிறுத்தப்பட்டுதாக உக்ரைன் கூறியுள்ளது.
newstm.in