பாஸ்பரஸ் குண்டுகளை வீசும் ரஷ்யா.. உக்ரைன் குற்றச்சாட்டு !
பாஸ்பரஸ் குண்டுகளை வீசும் ரஷ்யா.. உக்ரைன் குற்றச்சாட்டு !
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்யா. தாக்குதலை தொடங்கிய போது அரசு அலுவலகங்கள், காவல்துறை, உளவுத்துறை அலுவலக கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை நடத்தியது. அடுத்ததாக, குடியிருப்பு கட்டிடங்கள் மீது குண்டுகள், ஏவுகணைகளை வீசத்தொடங்கியிருக்கிறது ரஷ்யா.
இதனால் பொதுமக்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். ரஷ்யா தனது படையில் உள்ள, ஹைபர்சோனிக் ஏவுகணையை வீசி அண்மையில் தாக்குதல் நடத்தியது. இவ்வாறு அடுத்தடுத்து நவீன ஆயுதங்களை ரஷ்யா தாக்குதலில் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது பொதுமக்களைக் குறிவைத்து தாக்கும் ரஷ்யப் படைகள் பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஸ்பரஸ் குண்டுகள் வெடித்து சிதறும்போது பொதுமக்களின் உடல்கள் வெந்து புண் ஆவதாக அவர் தெரிவித்தார். இச்சூழலில் நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்கும், ரசாயன மற்றும் அணு ஆயுத எதிர்ப்பை வலுப்படுத்துமாறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா அடுத்ததாக இன்னும் பல ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த ஆயத்தமாகி வருவதால், அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் தங்களுக்கு ஆயுதங்களுடன், டேங்குகளும், போர் விமானங்களும் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஸ்பரஸ் குண்டு குறித்து பெரும்பாலானோர் இப்போது தான் கேள்வியே படுகிறோம். இக்குண்டு எப்படி தாக்குதல் நடத்தும் என பார்க்கலாம்.. பாஸ்பரஸ் குண்டு என்பது வென் பாஸ்பரஸால் ஆனது. இவை பூண்டின் வாசனையைப் பரப்பும். வெடித்துச் சிதறும் போது மிக அடர்த்தியான வெண் புகை மண்டலத்தை உருவாக்கும். இதனால் தாக்குதல் நடத்தும் படைகளுக்கு தற்காப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த வகை குண்டுகளை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தத் தடை உள்ளது. இந்த குண்டு மக்கள் மீது விழுந்தால் தோலில் தீக்காயங்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. இந்தப் புகையை சுவாசிப்பதால் புற்றுநோய் குறிப்பாக ரத்தப் புற்றுநோய் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த வகை குண்டுகளை ஈராக் போரில் அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. லெபனான், காசா போரின் போது இஸ்ரேல் இந்த வகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், சிரிய போரிலும் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
newstm.in