உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார் ரஷ்ய அதிபர் புதின் !!
உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார் ரஷ்ய அதிபர் புதின் !!
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை கைப்பற்றி தன்னோடு இணைத்துக்கொள்ள ரஷ்யாவின் திட்டமிட்டுள்ளது. இதில் முதல் படியாக கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்து தன் வசமாக்கியது.
அதுமட்டும் இன்றி உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் ரஷ்யா அவர்களின் மூலமாக உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு காய் நகர்த்தி வருகிறது.
இந்த சூழலில் ரஷியாவின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை தற்காத்துகொள்ள அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான ‘நேட்டோ’வில் உறுப்பு நாடாக சேர உக்ரைன் விரும்புகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நேட்டோ உறுப்பு நாடுகள் பச்சை கொடி காட்டின.
அதே சமயம் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தனக்கு ஆபத்து ஏற்படும் என உணர்ந்த ரஷ்யா கடுமையாக எதிர்க்கிறது. எனவேதான் இதுவரையில் உக்ரைனை ஆக்கிரமிக்க மறைமுகமாக காய் நகர்த்தி வந்த ரஷியா, படையெடுப்பின் மூலம் உக்ரைனை ஆக்கிரமிக்க முடிவு செய்து அந்த நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.
படைகள் குவிப்புக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வருகின்றன. இதனிடையே, உக்ரைனின் லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் பிராந்தியங்களை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷ்யா அதிபர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது நேற்று பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும் பல நாடுகள் பல்வேறு தடைகளை விதித்தது.
இதனிடையே ரஷ்யா, உக்ரைனில் உள்ள தனது தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரையும் வெளியேற்றும் பணியை தொடங்கியது.
இந்தநிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக ஏஃஎப்ப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் என அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதாவது, போர் அறிவிப்பை அதிபர் வெளியிட்டதாக கருதப்படுகிறது.
newstm.in