தேசியக்கொடி கம்பத்தில் காவிக்கொடி.. கர்நாடகாவில் மாணவர்கள் வன்முறை; போலீஸ் தடியடி
தேசியக்கொடி கம்பத்தில் காவிக்கொடி.. கர்நாடகாவில் மாணவர்கள் வன்முறை; போலீஸ் தடியடி
கர்நாடகாவில் ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள், அங்கிருந்த கம்பத்தில் தேசியக் கொடியை அகற்றி காவிக் கொடியை ஏற்றியதால் வன்முறை வெடித்தது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக வேற கல்லூரி, பள்ளி மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு மாணவர் கல்லூரி வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் ஏறி அதன் உச்சியில், தான் வைத்திருந்த காவிக் கொடியை ஏற்றினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பு மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் உருட்டுக் கட்டைகளாலும், கற்களை வீசியும் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக அங்கு வந்து தடியடி நடத்தி மாணவர்களை கலைந்து போக செய்தனர். இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஷிவ்மொக்கா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதேபோல, கர்நாடகாவின் தாவண்கரே மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரியிலும் ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் இருதரப்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். மாணவர்களும் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதன் பின்னர், போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மாணவர்களை கலைத்தனர்.
In #Shivmoga, Karnataka, the #RSS Students Wing #ABVP hoists the saffron flag instead of the national flag.
— Safa 🇮🇳 (@safaperaje) February 8, 2022
This is a clear example of #ABVPTerrorismInKarnataka.#Karnataka #KarnatakaHijabRow #HijabRow #Hijab #HijabisOurRight #SaffronShawls pic.twitter.com/vlNisZpYmQ
newstm.in