சல்யூட் ஆபீசர்.. அயல்நாட்டு வேலையை உதறிவிட்டு ஆர்மி ஆபீசராகும் இன்ஜினீயரிங் மாணவர்..!
சல்யூட் ஆபீசர்.. அயல்நாட்டு வேலையை உதறிவிட்டு ஆர்மி ஆபீசராகும் இன்ஜினீயரிங் மாணவர்..!
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள பெல்தங்கடி தாலுகாவை சேர்ந்தவர் கணபதி பட் குலமர்வா. இவரது மனைவி வசந்தி.
இந்த தம்பதிக்கு 3 மகன்கள். இதில் ஒரு மகன் சத்விகா குலமர்வா. இன்ஜினீயரிங் படித்த அவர் சிறு வயது முதலே இந்திய ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று முயற்சி செய்து வந்தார்.
ஆனால், கல்விக் கடனை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தால், அவர் தனது கனவை கைவிட்டுவிட்டு வேலைக்காக அமெரிக்கா சென்றார். இரண்டரை ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பினார்.
இதையடுத்து அவர் தனது ராணுவ இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கினார். சத்விகாவின் விடாமுயற்சியால் இந்திய ராணுவத்தின் உயர்ந்த பதவியான லெப்டினன்ட் அதிகாரியாக பணியில் சேர உள்ளார்.
இதுகுறித்து சத்விகா குலமர்வா கூறியதாவது; “சிறுவயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால், எனது குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த இலக்கு தடைபட்டது.
ஆனால், அமெரிக்காவில் பணிபுரிந்த போதும் எனது குறி ராணுவத்தில் சேருவதாகவே இருந்தது. இதற்காக அங்கு தீவிரமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன்.
பின்னர் எனது வேலையை உதறி விட்டு சொந்த ஊரான பெல்தங்கடிக்கு வந்து ராணுவ தேர்வுக்கு தயார் ஆனேன். எனது கடின முயற்சியால் தற்போது ராணுவத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜபல்பூரில் நடைபெற்று வரும் 2 வார ராணுவ பயிற்சிக்கு பின் இந்திய ராணுவத்தில் எனது பங்களிப்பு இருக்கும்” என்று பெருமை பொங்க கூறினார்.
வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தேர்வில் வெற்றி பெற்று ராணுவ அதிகாரியாக தேர்வான இன்ஜினீயரிங் மாணவர் சத்விகா குலமர்வாருக்கு பாராட்டுகள் குவிகிறது.