தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும்.. விஜயகாந்த் வேதனை..!

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும்.. விஜயகாந்த் வேதனை..!

Update: 2022-03-27 05:50 GMT

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவிகளும், பெண்களும் மதுவுக்கு அடிமையானால், பாலியல் குற்றங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று, விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்திலேயே மது அருந்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மது அருந்திய மாணவிகள் மீது பள்ளி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவிகளும், பெண்களும் மதுவுக்கு அடிமையானால், பாலியல் குற்றங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இளம் வயதிலேயே பாதை மாறிச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலோசனைகள் வழங்கி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

மதுவால் பல பெண்கள் வாழ்க்கைத் துணையை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் மதுவால் மாணவிகள் சீரழியாமல் இருக்க, அரசு, காவல் துறை, பள்ளி நிர்வாகம் ஆகியவை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Similar News