பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கல்வி.. அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை..!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கல்வி.. அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை..!
கேரளாவில், 13 வயது சிறுமியை அவருடைய மைனர் சகோதரனே பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், அந்த சிறுமி கர்ப்பம் ஆனார்.
அவரது வயிற்றில் உருவான 30 வார கருவை கலைக்க அனுமதி கோரி, சிறுமியின் பெற்றோர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கியது. மேலும், கருக்கலைப்பு அரசு மருத்துவமனையில் நடைபெற வேண்டும்.
இதில் குழந்தை உயிருடன் இருந்தால், அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். குழந்தையை பெற்றுக்கொள்ள சிறுமியின் பெற்றோர் மறுத்தால், அந்த குழந்தையை வளர்க்க அரசே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய ஐகோர்ட், அரசுக்கும் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில், கேரளாவில் தற்போது மைனர் சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நெருங்கிய உறவினர்களாக உள்ளனர்.
தற்போது, சமூக ஊடகங்கள் மற்றும் இணையங்கள் மூலமாக தவறான கருத்துக்களை பார்க்கும் நிலை குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது அவசியமாகிறது.
அதன்படி, பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை கற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சூழலில் இது மிகவும் அவசியம் என்று இந்த கோர்ட் கருதுகிறது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.