‘ஷவர்மா’ விற்கக் கூடாது.. நகராட்சி தலைவர் அதிரடி உத்தரவு..!

‘ஷவர்மா’ விற்கக் கூடாது.. நகராட்சி தலைவர் அதிரடி உத்தரவு..!

Update: 2022-05-09 16:37 GMT

சமீபத்தில், கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள ஐடியல் என்ற உணவகத்தில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட கரிவள்ளூரைச் சேர்ந்த தேவானந்தா என்ற 16 வயது மாணவி உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பிரிவு சாலை பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே புதிதாக திறக்கப்பட்ட கிரீன் லீப் உணவகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, கிரீன் லீப் உணவகத்துக்கு சீல் வைத்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஷவர்மா விற்க தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் இல்லாத கடைகளை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், ஷவர்மா போன்ற உணவுகளை சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் ஷவர்மா விற்க அந்நகராட்சி தலைவர் சௌந்தரராஜன் தடை விதித்துள்ளார்.

அத்துடன், சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்றால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் நகராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News