அதிர்ச்சி.. மீண்டும் 20 ரூபாய் உயர்வு..!
அதிர்ச்சி.. மீண்டும் 20 ரூபாய் உயர்வு..!
பருத்தி நூல் விலை உயர்வைத் தொடர்ந்து, பாலியஸ்டர் நூல் விலையும் தொடர்ந்து உயர்ந்து, எலாஸ்டிக் உற்பத்தியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரையிலான இரண்டு மாதங்களில் பாலியஸ்டர் நூல் விலை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்தது. தற்போது, கடந்த மாதத்தில் மீண்டும் கிலோவுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது: “பருத்தி நூல் விலை உயர்வால் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக, 40 சதவீத அளவில்தான் எலாஸ்டிக் உற்பத்தி நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் விலை உயர்வால், பாலியஸ்டர் நூல் விலை சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தற்போது ஒரே மாதத்தில் 20 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆர்டர் வழங்கினாலும், போதுமான அளவு பாலியஸ்டர் நூல் கிடைப்பதில்லை. அதனால், எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதித்துள்ளது.
மூலப்பொருள் கொள்முதலுக்கான நிதி தேவை அதிகரித்துள்ளது. எலாஸ்டிக் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. தற்போதைய தொழில் சூழலில், எலாஸ்டிக் விலையையும் உயர்த்த முடியாத நிலை உள்ளது.
பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், எலாஸ்டிக்கிற்கான தொகையை வழங்க 90 நாட்களுக்கு மேல் இழுத்தடிக்கின்றன. இது, நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. முன்பணம் செலுத்தினால் மட்டுமே பாலியஸ்டர் நூல் கிடைக்கிறது.
நிலுவை தொகை வசூல் ஆவதில் உள்ள சிக்கல்களால் போதிய அளவு நூல் வாங்க முடிவதில்லை. நெருக்கடியான இந்த சூழலில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் 60 நாட்களுக்குள் தொகை வழங்கினால் போதும்; எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களின் நிதி நெருக்கடி பிரச்சனைகள் ஓரளவு தீரும்” என்று அவர் கூறினார்.