திண்டிவனத்தில் அதிர்ச்சி.. மாணவனை தீயில் தள்ளிய சக மாணவர்கள்..!

திண்டிவனத்தில் அதிர்ச்சி.. மாணவனை தீயில் தள்ளிய சக மாணவர்கள்..!

Update: 2022-05-11 06:40 GMT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள காட்டுச்சிவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவருடைய 11 வயது மகன் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஒரு மாதத்திற்கு முன்பு இந்த சிறுவன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவு மாணவர்கள் அந்தச் சிறுவனை சாதிப் பெயர் சொல்லி கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுவன் தன் தந்தையிடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு ஆதங்கப்பட்ட சிறுவனின் தந்தை கன்னியப்பன், பள்ளி தலைமையாசிரியரிடம் முறையிட்டிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று (9-ம் தேதி) மாலை அந்த சிறுவன் தன் பாட்டி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு பிரிவைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள், அந்த சிறுவனை சாதிப் பெயரைச் சொல்லி கேலி செய்து, அங்கு எரிந்து கொண்டிருந்த தீயில் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தீக்காயத்திற்கு உள்ளான சிறுவன், அருகிலிருந்த தண்ணீர் தொட்டிக்கு கீழே தேங்கியிருந்த தண்ணீரில் உடலை நனைத்து தன்னைக் காத்துக் கொண்டுள்ளார்.

அதன்பின்னர் கேலி செய்ததாகக் கூறப்படும் மூன்று மாணவர்களில், இரு மாணவர்கள் இணைந்து சிறுவனை அவரது வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றிருக்கின்றனர்.

மகனின் உடலில் இருந்த தீக்காயங்களை கண்டு அதிர்ச்சியுற்ற தாயார், அருகில் இருக்கும் மண்ணம் பூண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்.

மகனின் இந்த நிலையைக் கண்ட கன்னியப்பன் அதிர்ச்சியுற்று, தீக்காயம் அதிகமாக இருப்பதைக் கண்டு மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சிறுவன் பேசும் பதைபதைக்க வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும், சிறுவனின் தந்தை வெள்ளிமேடு காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சிறுவனிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டியல் சமூக மாணவன் ஒருவனை மற்றொரு பிரிவைச் சேர்ந்த சக மாணவர்கள் சாதிப் பெயரைச் சொல்லி கேலி செய்து, நெருப்பில் தள்ளி விட்டதாக கூறப்படும் சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News