வீடு கட்டுவோருக்கு அதிர்ச்சி.. டன்னுக்கு 6000 ரூபாய் உயர்ந்தது டிஎம்டி கம்பி..!
வீடு கட்டுவோருக்கு அதிர்ச்சி.. டன்னுக்கு 6000 ரூபாய் உயர்ந்தது டிஎம்டி கம்பி..!
பெரிய பெரிய நிறுவனங்கள், சுரங்கங்களில் இருந்து மூலப்பொருட்கள் வாங்கி கட்டுமானத்திற்கு தேவையான டிஎம்டி கம்பிகள் தயாரித்து விற்கின்றன. சிறிய அளவிலான நிறுவனங்கள், கழிவு இரும்பு வாங்கி டிஎம்டி கம்பிகள் தயாரிக்கின்றன.
இரண்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இடையே விலையில் 2,500 ரூபாய் வரை வேறுபாடு இருக்கும். கடந்த சில வாரங்களாக டிஎம்டி கம்பிகள் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது, கட்டுமான துறையினருக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இதுகுறித்து கட்டுமானத் துறையினர் கூறியதாவது: ‘ஜனவரி இறுதி வார நிலவரப்படி, ஒரு டன் டிஎம்டி கம்பியின் விலை 65 ஆயிரம் ரூபாயாக இருந்தது; பிப்ரவரி முதல் வாரத்தில், 69 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.
இந்நிலையில், அனைத்து வகை கம்பிகளின் விலையும் டன்னுக்கு 6,000 ரூபாய் உயர்ந்து, 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால் வீடு கட்டுவோருக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் போட்டு, வங்கிக்கடன் வாங்கி வீடு கட்டுவோருக்கு இந்த விலை உயர்வு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மூலப்பொருட்களின் தட்டுப்பாடுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதில், மத்திய - மாநில அரசுகள், உரிய நடவடிக்கை எடுத்து, டிஎம்டி கம்பிகள் விலையை கட்டுப்படுத்த வேண்டும்’ என அவர்கள் கூறினர்.
கட்டுமானப் பணிகளுக்கான டிஎம்டி கம்பியின் விலை திடீரென டன்னுக்கு 6,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், வீடு கட்டுவோர் கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர்.