அதிர்ச்சி தகவல்.. கொரோனாவுக்கு பின் கிட்னி செயலிழப்பு அதிகரிப்பு..!
அதிர்ச்சி தகவல்.. கொரோனாவுக்கு பின் கிட்னி செயலிழப்பு அதிகரிப்பு..!
சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேற்று உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
“கொரோனா பேரிடருக்கு பின் உறுப்பு செயலிழப்பு பிரச்னைகள், குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழப்பு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இந்த நிலை உள்ளது.
மூளைச்சாவு ஏற்பட்ட நபர்களிடம் இருந்து உறுப்புகளை தானமாக பெற்று, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பொருத்தப்படுகின்றன. இந்த உன்னதமான சிகிச்சை முறையை வேகப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில், கடந்த 2008-ம் ஆண்டு ஹிதேந்திரன் என்ற 15 வயது மாணவன் விபத்தில் மரணமடைந்தபோது, அவரது உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, உடனடியாக ஒரு ஆணையத்தை உருவாக்கி, உறுப்பு தானத்தை கூடுதல் ஆக்கவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்.
பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில், மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்” எனக் கூறினார்.