தமிழகத்தில் இரவில் இயங்கும் கடைகளை மூடுமாறு போலீசா வற்புறுத்தக் கூடாது என தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஊழியா்களோடு இயங்கும் கடைகள், நிறுவனங்கள் அனைத்து நாள்களிலும் இரவிலும் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றமும் சில வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறைக்கு ஏற்கெனவே வழங்கியுள்ளது.

அரசின் ஆணையையும், நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையா்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் மாநிலத்தில் சில இடங்களில் காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்களை மூடுமாறு வற்புறுத்துவதாக புகாா்கள் வந்துள்ளன.

சட்டவிதிகளின்படி செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள்,உணவகங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளில் போலீசா குறுக்கீடக் கூடாது. முக்கியமாக இரவு நேரங்களில், அவற்றை மூடுமாறு வற்புறுத்தக் கூடாது. அதேவேளையில் உணவகங்கள், கடைகள்,  வணிக நிறுவனங்களில் சட்டவிரோதச் செயல்களோ, தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
newstm.in