என் மகன் மட்டும் அரசியலில் வளரக் கூடாதா..? கேட்கிறார் முதல்வர்..!
என் மகன் மட்டும் அரசியலில் வளரக் கூடாதா..? கேட்கிறார் முதல்வர்..!
மகாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தில், சிவசேனா மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
அவருடன், 40 சிவசேனா எம்எல்ஏ-க்களும், ஏழு சுயேச்சை எம்எல்ஏ-க்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அசாம் மாநிலம், கௌஹாத்தியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் அவர்கள் தங்கியுள்ளனர்.
‘தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டும்' என, சிவசேனா தலைமையை, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பையில் சிவசேனா நிர்வாகிகளுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று பேசினார்.
அப்போது அவர், “மகாராஷ்டிராவில் கூட்டணி அரசு உடனே கவிழ்ந்து விடும் என பாஜக எதிர்பார்த்தது. ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி நீடித்து வருகிறது.
இதனால், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்கு, ஏக்நாத் ஷிண்டே துணை போயுள்ளார். நகர்ப்புற வளர்ச்சித்துறை, முதல்வரிடம் இருப்பது தான் வழக்கம். ஆனால், அந்தத் துறையை ஷிண்டேவுக்கு வழங்கினேன். ஆனால், அந்த நன்றி அவருக்கு இல்லை.
அரசு பங்களாவிலிருந்து நான் வெளியேறியது, முதல்வர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை என்பதை தெரிவிக்கத்தான். ஆனால், போராட்ட குணத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன்.
ஷிண்டேவின் மகனை எம்பி ஆக்கியது சிவசேனா தான். அவர் மகன் எம்பியாக இருக்கலாம். என் மகன் ஆதித்யா மட்டும் அரசியலில் வளர்ச்சி அடையக் கூடாதா..?
தைரியம் இருக்கிறது என்றால், பாலாசாஹேப் மற்றும் சிவசேனாவின் பெயரை பயன்படுத்தாமல் ஷிண்டே மக்களிடம் செல்ல வேண்டும்” என்று கூறினார்.