மாணவிகளிடம் சில்மிஷம்.. பொதுமக்கள் போராட்டம்.. போக்சோவில் தலைமை ஆசிரியர் கைது..!

மாணவிகளிடம் சில்மிஷம்.. பொதுமக்கள் போராட்டம்.. போக்சோவில் தலைமை ஆசிரியர் கைது..!

Update: 2022-02-09 21:05 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட மேலாரணி மதுரா, தாங்கல் கிராமத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 55 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, தலைமை ஆசிரியராக காளியப்பன் (55) மற்றும் ஒரு ஆசிரியை பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தலைமையாசிரியர் காளியப்பன் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகக் கூறி 40-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர் நடுரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போளூர் டி.எஸ்.பி. குணசேகரன், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போளூர் கல்வி அதிகாரிக்கு டி.எஸ்.பி.குணசேகரன் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். இதில், தலைமை ஆசிரியர் மீது குற்றம் உறுதியானதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரை ஏற்ற இன்ஸ்பெக்டர் கவிதா, தலைமை ஆசிரியர் காளியப்பன் மீது போக்சோ உட்பட 2 சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Similar News