மாணவர்களை கவர மதுபாட்டில் வடிவில் குளிர்பானங்கள்.. அதிகாரிகள் அதிர்ச்சி !!
மாணவர்களை கவர மதுபாட்டில் வடிவில் குளிர்பானங்கள்.. அதிகாரிகள் அதிர்ச்சி !!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் நகரின் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சுகாதார அதிகாரி பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? காலாவதியான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். இந்த நிலையில் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியின் அருகில் உள்ள கடைக்கு சென்ற சுகாதார அதிகாரிகள் அந்த கடையில் இருந்த குளிர்பானங்கள் காலாவதி ஆனதா? என ஆய்வு செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஒரு கடையில் மதுபாட்டில்கள் வடிவில் குளிர்பானங்கள் இருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பாட்டிலில் உள்ள தகவல்களை சரி பார்த்தபோது அது மதுபாட்டில் இல்லை என்று தெரியவந்தது. ஆனால் உருவ ஒற்றுமை மதுபாட்டிலை போன்றே இருந்துள்ளது.
பின்னர் நடத்திய விசாரணையில், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையில் சில குளிர்பான நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை மதுபாட்டில் போன்று வடிவமைத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதை பலர் ஆர்வமுடன் வாங்கி பருகிவருகிறார்கள். இதில் மதுவகையில் உள்ள ஆல்கஹால் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தாலும் இது குறித்து உரிய ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க மேல் அதிகாரிகளுக்கு மாதிரி அனுப்பி வைக்கப்படும் என ஆய்வு நடத்திய அதிகாரிகள் கூறினர்.
newstm.in