இப்படியும் ஒருவரா..?: சம்பள பணம் ரூ.24 லட்சத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்..!
இப்படியும் ஒருவரா..?: சம்பள பணம் ரூ.24 லட்சத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்..!
பீகார் மாநிலம் முசாபர்பூரில், பி.ஆர்.அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் (பிராபு) கீழ் நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரி கடந்த 1970-ம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் நிதிஷேஸ்வர் பிரசாத் சிங் என்பவரால் நிறுவப்பட்டது. இங்கு, ஹிந்தி உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் லாலன் குமார் (33).
இவர், கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியில் சேர்ந்ததில் இருந்து தற்போது வரை பெற்ற மொத்த சம்பளமான 23 லட்சத்து 82 ஆயிரத்து 228 ரூபாயை பல்கலைக்கழக பதிவாளரிடம் திருப்பி அளித்துள்ளார்.
இதுகுறித்து லாலன் குமார் கூறியதாவது: “கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காலத்தில் பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்க என் மனசாட்சி அனுமதிக்கவில்லை.
ஆன்லைன் வகுப்புகளின் போது கூட ஹிந்தி வகுப்புகளுக்கு ஒரு சில மாணவர்கள் மட்டுமே வந்தனர். மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் சம்பளம் வாங்கினால் எனது கல்வி மரணமடைந்ததற்கு சமமாகும்” எனக் கூறினார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஹிந்தியில் முதுகலை மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி மற்றும் எம்.பில் முடித்த லாலன் குமார், கல்வித்துறையில் முதுகலை துறைக்கு இடமாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.