ரூ.80000 செலவில் நாய்க்கு சிலை.. நெகிழ வைத்த முதியவர்..!
ரூ.80000 செலவில் நாய்க்கு சிலை.. நெகிழ வைத்த முதியவர்..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பிரமானக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (80). சமூக நலத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், கடந்த 11 ஆண்டுகளாக ஷாம் குமார் என பெயரிட்டு நாய் ஒன்றை மிகவும் பாசமாக வளர்த்து வந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் அந்த நாய் இறந்தது. இதையடுத்து அந்த நாயை தனது வீட்டின்அருகில் புதைத்தார். வளர்ப்பு நாயின் இறப்பு முத்துவுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அதன் நினைவாகவே இருந்த முத்து, தனது விவசாய நிலத்தில் அதற்கு சிலை வடித்தார்.
அத்துடன், 80 வயதிலும் வெள்ளி, செவ்வாய் தவறாமல் பூஜை செய்து வணங்கி வருகிறார். இந்த சிலை சுமார் 80,000 ரூபாய் செலவில் மகாபலிபுரத்தில் செய்யப்பட்டதாகவும், வரும் காலங்களில் அந்த சிலை உள்ள இடத்தில் கோயில் கட்ட உள்ளதாகவும் முத்து தெரிவித்துள்ளார்.