திருச்சியில் தங்கி.. மாஜி அமைச்சர் ஜெயகுமாருக்கு நிபந்தனை ஜாமீன்..!
திருச்சியில் தங்கி.. மாஜி அமைச்சர் ஜெயகுமாருக்கு நிபந்தனை ஜாமீன்..!
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு பிரச்னை தொடர்பாக திமுக - அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், திமுக தொண்டர் நரேஷ் குமார் என்பவரை பிடித்து அவரது சட்டையை கழற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 10 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஜாமீன் மனுவை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, காயம் அடைந்தவர் குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம், ஜெயக்குமார் திருச்சியில் தங்கி, கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.