பஞ்சாப் மாநில சட்டப்பேரவையின் 117 தொகுதிகளுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2.14 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து செல்கின்றனர்.

இந்நிலையில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வாக்களித்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்துள்ளது. ஒட்டிப் பிறந்த இரட்டையர் வாக்களித்தது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பஞ்சாப் மாநில அரசு மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், பஞ்சாப் அமிர்தரஸ் மணவாலாவில் உள்ள வாக்குச் சாவடி 101ல் ஒட்டிப்பிறந்த இரட்டையார்களான சோஹ்னா மற்றும் மோஹ்னா வாக்களித்தனர்.

இவர்களின் வாக்கு மிகவும் தனித்துவமானது. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பட்டியலின் கீழ் வாக்களித்த இவர்களது வாக்குப்பதிவை முறையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவர்கள் இணைந்திருந்தாலும் இரண்டு தனி வாக்காளர்கள். அவர்களின் வாக்குகள் ரகசியம் காக்கப்படும் வகையில் அவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன, என்றார். 

கடினமான சூழலிலும் வந்த ஒட்டிப் பிறந்த இரட்டையர் வாக்களித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்லவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

newstm.in


 

Tags: