அரசு ஊழியர்களுக்கு விரைவில் அசத்தல் அறிவிப்பு.. வெளியான முக்கிய தகவல்..!
அரசு ஊழியர்களுக்கு விரைவில் அசத்தல் அறிவிப்பு.. வெளியான முக்கிய தகவல்..!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டங்களையும் நடத்தினர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குழு, பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்துகள் கேட்டு, அதை அறிக்கையாக கடந்த ஆட்சியின் போது அரசிடம் சமர்பித்தது.
மேலும், அரசு ஊழியர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை எழுத்து பூர்வமாகவும் வல்லுநர் குழுவினரிடம் கொடுத்தனர். ஆனால் இந்த அறிக்கை குறித்து எந்த ஒரு முடிவும் அரசு எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த மார்ச் 14-ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
அதற்கு தமிழக அரசின் சார்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். அதில், “கடந்த 2003 ஏப்ரல் 1-ம் தேதி அன்றோ, அதன் பின்னரோ முறையான அரசுப் பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது.
அந்த பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து உரிய முடிவை மேற்கொண்டு அதனடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில், ‘பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்’ என்று தெரிவித்திருந்தது. எனவே, வல்லுநர் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.