மதுரையில் மாணவிகள் மோதல்.. விசாரணையில் வெளியானது காரணம்..!

மதுரையில் மாணவிகள் மோதல்.. விசாரணையில் வெளியானது காரணம்..!

Update: 2022-05-03 11:20 GMT

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கடந்த சனிக்கிழமை ஈ.வெ.ரா நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகளும், மாப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இருவேறு அரசுப் பள்ளி மாணவிகள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பள்ளி மாணவிகளிடம் மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு தலைமையிலான குழு இன்று விசாரணை நடத்தியது.


இதன்பின்னர் மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இரண்டு பள்ளிகளின் மாணவிகளும் பெரியார் பேருந்து நிலையம் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து ஓடிப்பிடித்து விளையாடியபோது மாணவிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட முன்பகை காரணமாக சனிக்கிழமை இரு பள்ளியைச் சேர்ந்த மாணவிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டு மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.

மேலும், மோதலில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம். வரும் 5-ம் தேதி தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் அதுவரை மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு நடக்கும்போது மோதலில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்களே மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வந்து, பின்னர் தேர்வு முடிந்த பின் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும்.

மாணவிகள் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Similar News