மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு..!!
மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு..!!
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் தேர்ச்சியின்றி ஆல்பாஸ் செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் நேரடி பொதுத்தேர்வினை மாணவர்கள் எழுதி உள்ளனர்.
இது குறித்த பள்ளிகல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வை 1 லட்சத்து 95 ஆயிரத்து 292 மாணவர்கள் எழுதவில்லை. மேலும் பிளஸ்1 பொதுத்தேர்வை 2 லட்சத்து 58 ஆயிரத்து 641 மாணவர்களும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 2 லட்சத்து 25 ஆயிரத்து 534 மாணவர்களும் எழுதவில்லை என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 6.5 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகி இருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் பொதுத்தேர்வை எழுதாமல் ஆப்சென்டானவர்களை உடனடி தேர்வில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான படிவங்களையும் அது வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, ‘கடந்த 2 ஆண்டுகளாக நீடித்த கொரோனா கால நெருக்கடியால் மாணவ, மாணவிகள் மத்தியில் மனரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தேர்வின் மீது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் என்றால் நடுத்தர, அடித்தட்டு குடும்பங்கள் கொரோனா கால நெருக்கடியால் பொருளாதார ரீதியில் சிக்கலை சந்தித்துள்ளன. அவர்களின் குடும்பங்களில் 15 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் குடும்ப பாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாங்கள் அவர்களை அணுகியபோது சரியான பதில் கிடைக்கவில்லை. அதோடு பல குடும்பங்கள் வெளியூரில் செட்டிலாகியுள்ளனர்’ என்றனர்.