முடிந்தது கோடை விடுமுறை.. முக்கிய வழக்குகள் விசாரணை..!

முடிந்தது கோடை விடுமுறை.. முக்கிய வழக்குகள் விசாரணை..!

Update: 2022-06-06 11:00 GMT

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளைக்கு மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. ஒவ்வொரு வாரத்திலும் மூன்று நாட்கள் என, ஐந்து வாரங்கள் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கியது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் தலைமையில் விடுமுறை கால அமர்வுகள் இயங்கின. சென்னையில் 20 நீதிபதிகளும், மதுரையில் 15 நீதிபதிகளும் விடுமுறை காலத்தில் வழக்குகளை விசாரித்தனர்.

விடுமுறை தினமான ஞாயிறு அன்றும் அவசர வழக்கு ஒன்றை 'வாட்ஸ் அப்' மூலம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து உத்தரவு பிறப்பித்தார்.

ஒரு மாதத்துக்கும் மேலான கோடை விடுமுறை நேற்றுடன் முடிந்து, இன்று (6-ம் தேதி) உயர் நீதிமன்றம் திறக்கிறது. இதையடுத்து, இந்த மாதத்தில் முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் 62 நீதிபதிகளுடன் உயர் நீதிமன்றம் இயங்க தொடங்கியது. இந்த எண்ணிக்கை, தற்போது 56 ஆக குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் நான்கு நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். அதற்கு முன், இரண்டு நீதிபதிகள் ஓய்வு பெற்றனர்.

ஐந்து மாதங்களில் ஆறு நீதிபதிகள் ஓய்வு பெற்றதால், நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக குறைந்துள்ளது. புதிதாக இரு நீதிபதிகள் தற்போது நியமிக்கப்பட்டு உள்ளதால், எண்ணிக்கை 58 ஆக உயரும்.

உயர் நீதிமன்றத்தில் 'கோர்ட் ஹால்'களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விதமாக 10 ஹால்கள் தயாராகி வருகின்றன. இதில், ஒரு கோர்ட் ஹால் முடியும் தருவாயில் உள்ளது. ஏழாவது கோர்ட் ஹாலாக அது இருக்கும்.

Similar News