தமிழகத்தில் நேற்று 103 டிகிரியில் கொளுத்திய வெயில்.. இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் !
தமிழகத்தில் நேற்று 103 டிகிரியில் கொளுத்திய வெயில்.. இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் !
தமிழகத்தில் நேற்று காலை முதலே வெயில் கொளுத்தியது. காற்றும் வீசாத காரணத்தால் சாலைகளில் அனல் காற்று வீசியது. புழுக்கம் காரணமாக குழந்தைகள், முதியோர், நோயாளிகள் வீட்டில் இருக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் நாட்கள் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி வேலுர் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 103.1 டிகிரி பாரனிட் வெப்பம் பதிவானது, அடுத்தாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 102.2 டிகிரி வெப்பம் பதிவானது. மேலும் சென்னை, சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளில் 98.6 டிகிரி வெப்பநிலை பதிவானது. எனினும் சென்னை உட்பட பல மாவட்டங்களில் அனல் காற்று வீசியது குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளது.
மேலும், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நேற்று, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்தது. இன்றும் மற்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நாளை மறுநாள் அதாவது 19ஆம் தேதி தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வரும் 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும், என அதில் கூறப்பட்டுள்ளது.
newstm.in