ஆசிரியர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !!
ஆசிரியர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !!
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் 2012 முதல் 2019 வரை 5 முறை ‘டெட்’ தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 95 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 25 ஆயிரம் பேர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். எஞ்சியவர்கள் அரசுப் பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 2020, 2021-ஆம் ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது, கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி தேர்வுகளும் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளும்கூட அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, 2022ஆம் ஆண்டுக்கான ‘டெட்’ தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 7ஆம் தேதி வெளியிட்டது. மேலும், இந்தத் தேர்வுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்திருந்தது. அதன்படி, டெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (14-ம்தேதி) தொடங்குகிறது. தாள்-1 தேர்வைஇடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், தாள்-2 தேர்வைபிஎட் முடித்த பட்டதாரிகளும் எழுத வேண்டும்.
உரிய கல்வித்தகுதி உடையவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை (www.trb.tn.nic.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.500 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கட்டுப்பாடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட்இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in