நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு – தையல் கடைக்காரர் தலை துண்டிப்பு!!

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு – தையல் கடைக்காரர் தலை துண்டிப்பு!!

Update: 2022-06-29 06:30 GMT

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவளித்ததால், ராஜஸ்தானில் தையல் கலைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை வைத்திருந்த கணையா லால், கடையில் வழக்கம்போல பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த இருவர் உடை தைக்க அளவு எடுக்க வேண்டும் என அவரிடம் பேசி உள்ளனர்.

கணையா லால் அளவெடுத்துக் கொண்டிருக்கும்போதே, ஒருவர் கத்தியால் அவரை தாக்கியுள்ளார். மற்றொருவர் நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இருவரும் தையல் கடைக்காரரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.

கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் கணையா லால் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், கணையா லால் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கொலையாளிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டதால் மேலும் பதட்டம் அதிகரித்தது. நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக இணையதளத்தில் பதிவிட்டதால் வெட்டி கொன்றதாக கூறினர்.

மத வெறியால் படுகொலையில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் கடும் அதிருப்தியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

கொலையாளிகளில் ஒருவர் வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சுறுத்தல் விடுத்திருப்பது அரசியல் ரீதியாகவும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என ராஜஸ்தான் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

newstm.in

Similar News