சரணடைந்த ரஷ்ய வீரர்... அன்புடன் உபசரித்த உக்ரைன் பெண்கள்!

சரணடைந்த ரஷ்ய வீரர்... அன்புடன் உபசரித்த உக்ரைன் பெண்கள்!

Update: 2022-03-05 04:45 GMT

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் ரஷ்ய வீரர் ஒருவர் தனது ஆயுதங்களை எறிந்துவிட்டு, உக்ரைன் பொதுமக்களிடம் சரணடைந்துள்ளார்.

மிகவும் பயந்து போயிருந்த அவருக்கு அந்த தாய்மார்கள் தேநீரும் உணவும் கொடுத்து உண்ணச் சொல்லியதுடன், அவர் தனது தாயுடன் பேசுவதற்கு தங்கள் மொபைல் போனையும் கொடுத்து உதவியுள்ளனர்.

ஒரு பெண் மொபைலைப் பிடித்துக்கொள்ள, ஒரு கையில் தேநீரும், மறு கையில் ஒரு உணவுப்பண்டமும் வைத்திருக்கும் அந்த ரஷ்ய வீரர், மொபைலில் தன் தாயைக் கண்டதும் கண்ணீர் விட்டுக் கதறுகிறார்.

கதறியழும் அவரது முதுகைத் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறுகிறார்கள் அந்த பெண்கள். அத்துடன், போனின் மறுமுனையில் தன் மகனுடன் பேசும் அந்த தாய்க்கும் ஆறுதல் கூறுகிறார்கள் அந்தப் பெண்கள்.

ஒரு பெண் அந்த வீரரின் தாயிடம், நடாஷா, கடவுள் உங்களுடன் இருப்பாராக, உங்கள் மகன் உயிருடனும் நல்ல நிலையிலும் இருக்கிறார். மீண்டும் உங்களுடன் பிறகு தொடர்பு கொள்கிறோம் என்று கூறுவதை, அந்த வீடியோவில் காணலாம்.

அத்துடன், வீடியோவின் பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. ‘இது இந்த இளைஞர்களின் தவறு அல்ல, தாங்கள் எதற்காக உக்ரைன் வந்திருக்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் பழைய வரைபடங்களை வைத்திருக்கிறார்கள். திக்குத் தெரியாமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள்’ என்கிறது அந்தக் குரல்.

இந்த வீடியோ ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் இப்படி எழுதப்பட்டுள்ளது. ‘ரஷ்ய வீரர்களே சரணடையுங்கள், உக்ரைன் மக்கள் உங்களுக்கு உணவளிப்பார்கள்’.

இந்த வீடியோ ரஷ்யாவிலும் உக்ரைனிலும் வைரலாக, தங்கள் நாட்டை ஊடுருவுவதற்காக வந்த இராணுவ வீரர் மீது உக்ரைனியர்கள் காட்டும் இரக்கத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.


 

Tags:    

Similar News